சர்கார் பட பிரச்சனையினால் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நள்ளிரவில் முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற நிலையில் இன்று முன் ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.
சர்கார் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் காட்சிகள் இருப்பதால் அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து இயக்குநர் முருகதாஸ், ‘’சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பலமுறை கதவை தட்டினர். நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர்’’என்று ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்திருந்தார்.
இதையடுத்து இன்று காலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் முருகதாஸ்.