Skip to main content

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

செல்போனுக்கு சார்ஜ் செய்த போது நேர்ந்த சோகம்; மாணவன் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The tragedy happened while charging the cell phone; College student lose their live

ராமநாதபுரத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் அமுத கிருஷ்ணன். சம்பவத்தன்று அமுத கிருஷ்ணன் தன்னுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மாணவன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவனை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் அமுத கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.