கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த நெய்வேலி காவல்துறையினர் மேல்பட்டாம்பாக்கம் அருகே பி.என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கூலி தொழிலாளியை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவரிடம் ஒரு வார காலம் விசாரணை செய்தனர். பின்னர் நெய்வேலி காவல்துறையினர் அவரின் கை மற்றும் கால்களின் நகங்களை பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் காவல்துறையினர் செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இதனையொட்டி இந்த வழக்கு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 174 சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் அப்போது நெய்வேலி காவல் ஆய்வாளராக இருந்த ராஜா தற்போது (வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார் ) இவருடன் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல் மற்றும் காவலர் சௌமியன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி சிபிசிஐடி காவல்துறையினர் கொலை அல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதை அறிந்து கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை குற்றவாளியான ராஜாவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும் பிற முக்கிய நபர்கள் மூலமும் சுப்பிரமணியன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சனைகளும் கொடுத்து வந்தனர்.
கொலை வழக்கு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டியும் விடுவிக்க கோரியும் மனு தாக்கல் செய்தனர்.
இதனால் சுமார் ஒரு வருடமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரேவதியின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 11.1.2024 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2 மாதத்திற்குள் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஜனவரி 24-ஆம் தேதி கடலூர் சிறப்பு எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜீவக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின், மேரி, சுரேஷ், ஆழ்வார், பரமேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், வாதியான ரேவதி மற்றும் குற்றவாளியான ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், சௌமியன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
3 மாதத்தில் தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் ராஜா அதுவரை எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இதை கேட்டால் சக காவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் இவர் செய்யும் செயலால் கூட இருக்கும் காவலர்களுக்கும் பிரச்சனை ஏற்படலாம் என்ற பயம் உள்ளது என காவல்துறையினரே கூறுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி என்பவரின் கணவர் ராசாகண்ணுவை கம்மாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் திருட்டு வழக்கில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்த சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைத்தது. இதை ஜெய்பீம் படம் மூலம் அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை பக்கத்துக் காவல் நிலையமான நெய்வேலி காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.