ஆவின் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆவின் பால் குளிரூட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 60,000 லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உற்பத்திக் கூடத்தில் திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆவின் பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆவின் கசிவு தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் அமோனியா வாயு கசிந்த சிலிண்டரை மிகவும் போராடி நிறுத்தி வைத்தனர். இங்கு அடிக்கடி இதுபோன்ற கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில் இன்று ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.