நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.