நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.
இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.