
அரசின் தேவைகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், மத்திய – மாநில அரசுகள் ஆதாரைக் கட்டாயமாக்கியே வைத்துள்ளன.
அரசு மற்றும் தனியார் துறையில் எது ஒன்றுக்கும் ஆதார் எண் வேண்டும் எனக் கேட்கும் நிலையே உள்ளது. தொடக்கத்தில் ஆதார் தகவல்களை தப்பும் தவறுமாகப் பதிவு செய்துவிட்டார்கள் அதன் பணியாளர்கள். இப்போது ஆதாரில் இருப்பது போல் பெயர் இருக்க வேண்டும், முகவரி இருக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள் அதிகாரிகள்.
தவறானதை திருத்த, புதிய தகவல்களைச் சேர்க்க ஆதார் மையம், அஞ்சலகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் எனச் சில இடங்களில் அமைக்கப்பட்டாலும், கரோனா பிரச்சனையால் இந்த இடங்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால், அரசின் வளாகத்தில் செயல்படும் இந்த மையத்துக்கு வருகை தருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்படுகிறது. இந்த மையத்துக்கு ஆதார் தகவல்களை திருத்தவும், புதிய கார்டு பெறவும் தினமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திருப்பத்தூரை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து வருகை தருகிறார்கள்.
காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய ஆதார் மையம், 10 மணிக்கு மேலே திறக்கப்படுகிறதாம். அதோடு, அங்கு பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுவதும், 50 ரூபாய் கட்டணத்துக்குப் பதில் 60 ரூபாய், 70 ரூபாய் பெறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு டோக்கன் தந்து உட்காரவைக்கப்படுகிறார்கள். காலை சாப்பாடு, மதியம் உணவு போன்றவற்றை பல ஏழை மக்கள் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். சிலர் கையில் காசுமில்லாமல் பட்டினியில் நாள் முழுவதும் அமர்ந்து, வந்த வேலையை முடித்துக்கொண்டு செல்கிறார்கள். விபரம் தெரியாத மக்கள் என்பதால் தேவையான ஆவணங்களைக் கொண்டு வரமுடியாமல் மறுநாள் வந்து காத்திருந்து வேலையை முடித்துக்கொண்டு செல்கின்றனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாவட்டத்தில் ஆதார் மையங்களை அதிகப்படுத்தி பொதுமக்களின் அலைச்சலையும், நேரத்தையும் குறைத்து வேகமாக வேலையை முடிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.