Published on 05/06/2018 | Edited on 05/06/2018
நடிகர் எஸ்வி சேகரின் முன் ஜாமின் மறுக்கப்பட்டபோதும், அவரை கைது செய்யாத சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் ஆய்வாளருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் வந்த பதிவை தமது பேஸ்புக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவு தொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் அளித்த புகாரில் எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ராமத்திலகம், கடுமையான கண்டனங்களுடன் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் கோரிக்கை வைக்க உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வரை சென்ற எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவரை கைது செய்யாத சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் ஆய்வாளருக்கு எதிராக பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.