நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கோரி சென்னை ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
அரசியல் நிலைப்பாடு குறித்து தனது அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தியிருந்தார். அதில், அரசியலுக்கு வர போவதில்லை. என்னை சுற்றியுள்ளவர்களைப் பலிகடா ஆக்க விரும்பவில்லை; என்னை மன்னியுங்கள் என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரஜினியின் அறிவிப்பை தொடர்ந்து, அவரின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவியத்தொடங்கிய ரசிகர்கள், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினிக்கு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கோரி அவரின் ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கார், பேருந்துகள் மூலமாக வந்த ரசிகர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். சில ரசிகர்கள் ரஜினியின் உருவப்படத்துடன் கூடிய 'டீ சர்ட்' அணிந்தும், தங்களது குடும்பத்தினருடனும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் கூறுகையில் "அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்த முடிவை ரஜினி மறுபரிசீலனை செய்ய வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரஜினி மக்கள் மன்ற தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.