வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திராநகர் பகுதியில் துர்வாசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இன்று பிற்பகல் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேல் தளத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது அருகில் இருந்த மின்சார கம்பி கட்டிட தொழிலாளி பச்சையப்பனின் தோள்பட்டையில் மின்சார கம்பி பட்டு தூக்கி வீசப்பட்டார். கட்டிடத்தின் மேல் இருந்த கம்பிகளில் சிக்கி துடிதுடித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை காப்பாற்ற முயன்ற உடன் வேலை செய்த மற்றொரு தொழிலாளி விஜய் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பச்சையப்பன் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜய் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பச்சையப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிடத்தின் உரிமையாளர் துர்வாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டிய கட்டிடப்பணியில் சிறிய அளவில் கூட பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் வேலை செய்ததே ஒரு தொழிலாளி உயிர் பலியாகவும், மற்றொரு தொழிலாளி உயிர் பிழைக்க போராட்டம் நடத்தக்காரணம்.