நாமக்கல் அருகே கூலித்தொழிலாளியிடம் வட்டியில்லா வீட்டுக்கடன் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் 7.86 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் விஜயகுமார் (36). கட்டடத் தொழிலாளி. இவர் புதிதாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கத் திட்டமிட்டார்.
அந்த நேரத்தில், இவருடைய அலைபேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், வீடு கட்டுவதற்காக 18 லட்சம் ரூபாய் வரை எந்த விதப் பிணையமுமின்றி வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தார். எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலப் பத்திரத்தின் நகலை ஆன்லைனில் அனுப்பி வைக்கும்படி கூறி ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கினார்.
அதன்படி அனைத்து ஆவணங்களையும் விஜயகுமார் அந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவரிடம் முன்பணமாக 7.86 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தினால் வட்டி இல்லாமல் கடன் கிடைப்பதோடு, முன்பணமாக செலுத்திய தொகை போக அசல் கடன் தொகையை மட்டும் தவணை முறையில் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பிய விஜயகுமார் பல தவணைகளாக அத்தொகையை மர்ம நபர்கள் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மூன்று மாதங்கள் கழிந்த பிறகும் சொன்னபடி வீட்டுக்கடன் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட அந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.