வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர். அதே சமயம் வடமாநிலத்தவர் போல சிலர் சட்டவிரோதமாகக் குடியேறி வருகின்றனர். இதன் காரணமாகத் திருப்பூர் மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் நேற்று (24.09.2024) திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் உள்ள ஆவணங்களை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் ஆறு பேரிடம் இருந்த ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் வங்கதேசத்தினர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் அவர்களிடம் போலியான ஆதார் அட்டையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆவணங்களின்றி வேலைக்கு வந்தவர்கள் தன்வீர், முகமது அஸ்லம், முகமது அல் இஸ்லாம், ரசீப் தவுன், முகமது, சவுமுன் சேக் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து பணியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகத் திருப்பூர் வந்துள்ளனர். அங்குள்ள ஆலை ஒன்றில் பணிபுரிய அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டபோது வங்கத்தேசத்தினர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் பணி வழங்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியத் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது 6 பேரும் போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.