குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை தருவதாகக் கூறி, 1250 பேரிடம் 4 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கனஹள்ளி சுபைதார்மேட்டைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 42). இவருடைய தம்பி அசோக்குமார் (வயது 41). இவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தனர்.
மொத்தமாக நிலத்தை வாங்கி, முதலீட்டாளர்களுக்குக் குறைந்த விலையில் பிரித்துக் கொடுப்போம் என விளம்பரம் செய்தனர். இதை நம்பி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை 1250 பேரிடம் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டு, திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.
இந்நிறுவனத்தில், சேலத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து மனோகரன், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் தமிழ்ச்செல்வன், அசோக்குமார் ஆகியோர் மீது கடந்த 2016- ஆம் ஆண்டில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணன், தம்பி இருவரையும் தேடி வந்தனர். ஆறு ஆண்டுகள் ஆகியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் சேலம் 5 சாலை பகுதியில் செல்வதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜ்குமாருக்கு புதன்கிழமை (டிச. 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தைக் கொண்டு அவர்கள் பல்வேறு இடங்களில் காலி மனைகளை வாங்கி போட்டிருப்பது தெரிய வந்தது. எந்தெந்த இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.