ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குபிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பையும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 2 ஆய்வாளர்கள் 4 காவலர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ், கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு டி.ஐ.ஜி. யாக உள்ள ஜியா உல்ஹக் விழுப்புரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.