கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(13.10.2024) இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் (அக்.14) திங்கள்கிழமை காலை கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள் நகர் பகுதியில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. மழைநீரில் அறுத்து விழுந்த மின்கம்பியால் அப்பகுதி சாலை முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்து.
இந்நிலையில் அவ்வழியாக சென்று நாய் ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதனை அடுத்து மேலும் இரண்டு நாய்கள் அங்கு சென்றது. அதனை பொதுமக்கள் விரட்டியும் அந்தப் பகுதிக்குச் சென்ற அந்த இரு நாய்கள் மீது மின்சாரம் பாய்ந்து துடி துடித்து உயிரிழந்தது. உடனடியாக இது குறித்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மின்துறைக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மின் துறையினர் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி 3 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.