தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் கட்டுக்கட்டாக 2 கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தில் துணிக்கடை வைத்திருக்கும் பகத்ராம் என்பவர் 500 ரூபாய் கொடுத்து பார்சல் ஒன்றை தனியார் சொகுசு பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி உள்ளார். அந்த பார்சலில் பொம்மைகள் இருப்பதாகவும் மாதவரத்தில் உள்ள சூரஜ் பூரி என்பவர் பொம்மைகள் உள்ள அந்த பார்சலை பெற்றுக் கொள்வார் என பேருந்து ஓட்டுநரிடம் பகத்ராம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேருந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு குட்கா பொருட்கள் தொடர்பாக சோதனை இடப்பட்டது. அப்பொழுது பகத்ராம் அனுப்பிய பார்சல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அதை திறந்து பார்த்தனர். அதிர்ச்சி தரும் விதமாக பார்சலில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தது.
உடனடியாக பேருந்தை ஓட்டிவந்த நெல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். துணிக்கடை உரிமையாளர் பகத்ராம் தன்னிடம் 500 ரூபாய் கொடுத்து இந்த பார்சலை சென்னை மாதவரத்தில் ஒப்படைத்து விடும்படி கூறியிருந்தார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ் பூரி என்பவர் பார்சலை பெற்றுக் கொள்வார் பகத்ராம் தெரிவித்ததாகவும், அதில் பணம் இருப்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பார்சலை ஏற்றிவிட்ட பகத்ராம் மற்றும் பார்சலை பெற்றுக் கொள்வதாக இருந்த சூரஜ் பூரி ஆகியோரின் செல்போன் நம்பர்களை பேருந்து ஓட்டுநர் சுரேஷ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். போலீசாரின் திட்டப்படி பார்சலை பெற இருந்த சூரஜ் பூரிக்கு, சுரேஷ் தன்னுடைய செல்போனிலிருந்து கால் செய்தார். தான் ஓட்டி வந்த பேருந்து பழுதாகி பாதிவழியில் நிற்கிறது. எனவே நேரில் வந்து உங்களுடைய பார்சலை பெற்றுக் கொள்ளும்படி இருப்பிட லொகேஷனை சுரேஷ் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து பார்சலை பெற வந்த சூரஜ் பூரியை போலீசார் சாதுரியமாக பிடித்தனர். அந்த பார்சலில் உள்ள பணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பகத்ராம் சென்னையில் நிலம் வாங்குவதற்காக 75 லட்சம் ரூபாய் பணத்தை பார்சல் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டுவரப்பட்டது உறுதியான நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் உதவியை போலீசார் நாடினர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார், போலீஸ் உயரதிகாரிகள் என பலரும் அங்கு முகாமிட்டதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் பார்சலில் இருந்த பணத்தை எண்ணி முடித்தனர். ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்தில் 2.15 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.