கிருஷ்ணகிரியில் 21 வயது பட்டதாரி மாணவி தலைமையில் கூட்டுக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வேலு நகர் குடியிருப்பைச் சேர்ந்த தம்பதியினர் பார்த்திபன் ஷர்மிளா. இவர்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்துவந்த பூமிகா என்னும் 21 வயது பட்டதாரி பெண், சர்மிளாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி பார்த்திபன் வேலை காரணமாக வெளியூர் செல்ல, சர்மிளா உடன் பூமிகா பேசிக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளா மற்றும் பூமிகா ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துச் சென்றனர். பூமிகாவின் கம்மலையும் பறித்துச் சென்றது அந்த கொள்ளை கும்பல்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 3 லட்சம் எனக் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து சிப்காட் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுதொடர்பாக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் இருந்த பட்டதாரி பெண்ணான பூமிகாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது பூமிகாவின் வாக்குமூலங்கள் காவல் துறையினருக்குச் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பு பூமிகாவை அவர்கள் பாணியில் விசாரித்த பொழுது இந்த கொள்ளை சம்பவத்தை தலைமையேற்று அரங்கேற்றியதே பூமிகாதான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளில் பூமிகா தெருவின் ஒரு பகுதியில் ஐந்து நபர்களுடன் நின்று கொள்ளை நடந்த அன்று பேசிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.
அதன் பின்தான் அடுக்கடுக்கான உண்மைகள் அவரிடம் விசாரித்ததில் வெளிவந்தது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்த பட்டதாரி மாணவி பூமிகா சொகுசாக வாழ ஆசைப்பட்டு ஃபேஸ்புக் நண்பர்களிடம் பக்கத்து வீட்டில் உள்ள நகையைக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டு சர்மிளா என்பவரிடம் அடிக்கடி சென்று நட்பாக பழகி வந்து அவரிடம் உள்ள நகைகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
பெங்களூரில் உள்ள தனது ஃபேஸ்புக் நண்பர் பிரசாந்த்திடம் இதைப்பற்றி கூறி கொள்ளையடிக்க தேதியும் குறித்த பூமிகா. கொள்ளை நடந்த நாளன்று சர்மிளாவின் வீட்டிற்கு துணிதைக்க செல்வதுபோல் சென்று பேசியுள்ளார். அப்பொழுது திட்டமிட்டபடி அந்த கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளாவிடமிருந்து நகையைப் பறித்தது. சந்தேகம் வராமலிருக்க பூமிகாவிடமும் கம்மலையும் பறித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பூமிகா, பிரசாந்த், புட்டராஜு. சஞ்சய், கிரண், நாகராஜ், என ஆறு பேரையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். படித்த பட்டதாரி இளம்பெண் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டுக்கு அருகில் நட்பு முறையில் பழகிவந்த பெண்ணிடமே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.