தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.