தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதினர். இவர்களுடன் சுமார் 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் இந்த தேர்வை எழுதினார்கள். இதனையடுத்து 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) காலை 09:30 மணியளவில் வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதனையடுத்து மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https/resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளியான தேர்வு முடிவுகளின் படி, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.11 லட்சம் பேரில் 7.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும், மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப்பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 241 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.