தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) காலை 09:30 மணியளவில் வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதனையடுத்து மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https//resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியான தேர்வு முடிவுகளின் படி, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.11 லட்சம் பேரில் 7.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும், மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்ப்பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3 ஆயிரத்து 432 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். தமிழ் - 8, ஆங்கிலம் - 13, இயற்பியல் - 696, வேதியியல் - 493, உயிரியல் - 171, கணிதம் - 779, தாவரவியல் - 2, விலங்கியல் - 29, கணினி அறிவியல் - 3 ஆயிரத்து 432, வணிகவியல் - 620, கணக்குப் பதிவியல் - 415, பொருளியல் - 741, கணினிப் பயன்பாடுகள் - 288, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 293 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன்படி ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 418 ஆகும்.
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -1964 ஆகும். அதில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 241 ஆகும். இதில் அரசுப் பள்ளிகள் - 85.75%, அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.09% இருபாலர் பள்ளிகள் - 91.61%, பெண்கள் பள்ளிகள் - 94.46%, ஆண்கள் பள்ளிகள் - 81.37% தேர்ச்சி பெற்றுள்ளன. இயற்பியல் - 97.23%, வேதியியல் - 96.20%, உயிரியல் - 98.25%, கணிதம் - 97.21%, தாவரவியல் - 91.88%, விலங்கியல் - 96.40%, கணினி அறிவியல்- 99.39%, வணிகவியல் - 92.45%, கணக்குப் பதிவியல் - 95.22% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வெழுதிய 8 ஆயிரத்து 221 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7 ஆயிரத்து 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் 91.27% சதவிகித மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2 வது இடமும், 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3 வது இடமும் பிடித்துள்ளன. அறிவியல் பிரிவில் - 94.31% பேரும், வணிகவியல் பிரிவில் - 86.93% பேரும், கலைப் பிரிவில் 72.89% பேரும், தொழிற்பாடப் பிரிவில் - 78.72% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.