பிரபல யூடியூபர் இர்ஃபான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்குச் சென்று கண்டறிந்து அதனைச் சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்குத் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவும் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இர்ஃபானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களைக் கைப்பற்றி செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இத்தகைய சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'இந்த விவரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூட்யூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை 10 நாட்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். மற்ற எந்த சிகிச்சையும் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக நலப் பணிகள் இயக்ககம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.