சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில் கைதி ராஜசேகர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''முதலமைச்சர் சொன்னார் காவல் துறைக்காக ஒரு ஆணையத்தை அமைக்கிறோம் என்றார். சொன்னபடி அமைத்தார்கள். ஆனால் அந்த ஆணையத்தில் என்ன கொடுமை என்றால் எந்த ரிட்டயர்டு ஜட்ஜை போட்டார்களோ அந்த நீதிபதியுடைய பாதுகாப்பு காவலரையே ரோட்டில் வெட்டிக் கொலை செய்துவிட்டு போய்விட்டார்கள். அதன்பிறகு அந்த ஆணையத்தின் நிலைமை என்ன?. காவல்துறையினருடைய பணிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த அரசு என்னவிதமான திட்டங்களை கையில் எடுத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று, காவல்துறையினரே தவறு செய்கிறார்கள். அரசியல் தலையீடு காரணமாக தவறு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பணிச்சுமை காரணமாக இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.
18 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும், மேலதிகாரிகள் வேகமாக குற்றவாளியை பிடித்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி சிறைக்கு அனுப்ப வேண்டும் என பிரஷர் கொடுப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதுதொடர்பாக எப்படிப்பட்ட தற்காலிக தீர்வுகளை முதல்வர் அறிவிக்கப் போகிறார். குறிப்பாக போலீசாரின் மனஉளைச்சலை குறைப்பதற்கு என்ன செய்யப்போகிறார் என்பதை முதல்வர் சொல்லவேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடு காவல்துறையில் அதிகமாக இருக்கிறது. நேற்று மாலை ஒருவர் விசாரணை கைதியாக உயிரிழந்துள்ளார்.இன்று ஒருவர் விசாரணை கைதியாக இறந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏழு லாக்கப் மரணங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது காவல்துறை, எனவே முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பதிலாக டிஜிபி அவர்களோ, காவல் ஆணையர் அவர்களோ பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் தகவல்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
சாத்தான்குளத்தில் காவலர்கள் நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தற்போதைய முதல்வர் அந்த நேரத்தில் அதனை எப்படிப்பட்ட அரசியலாக மாற்றினார் என்பதை பார்த்தோம். ஆனால் இப்பொழுது நிகழ்ந்துள்ளதை அரசியலாக்கவில்லை நடந்த தவறை மட்டுமே கேட்கிறோம். ஏன் இந்த தவறு நடந்தது? ஒருமுறை தவறு நடந்தது, இரண்டாவது முறை இதே தவறு நடக்காமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தீர்கள். சிறையில் கைதிகள் மரணமடைவது மட்டுமல்லாது ஒருபக்கம் காவல்துறையின் செயலின்மையும் குறிப்பிடத்தகுந்தது. ரோட்டிலேயே கொலைகள் நடப்பது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வது. இதுபோன்ற பெரிய பெரிய குற்றங்கள் காவல்துறையின் செயலின்மையைக் காட்டுகிறது. தமிழக காவல்துறை பொறுத்தவரை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறது. பல்லை பிடுங்கியது திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் எனும் பாம்பாட்டிகள். எனவே இதில் சரி செய்யப்பட வேண்டியது திமுகவின் அரசியல் தலையீடு தான்'' என்றார்.