திருச்சி காந்தி மார்க்கெட்டை மூடுவதற்கு, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்ட நிலையில், மீண்டும் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் வருகின்ற 26 ஆம் தேதி அதற்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, தங்களுக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த வியாபாரிகள், இன்று (21.11.2020) திருச்சி பால்பண்ணை வெங்காய மண்டியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த வியாபாரிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காந்தி மார்க்கெட்டை திறக்க, உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 24 -ஆம் தேதி மாலை முதல், திருச்சி முழுவதும் காய்கறிகள் விற்பனை கிடையாது. திருச்சி மாவட்டத்திற்குள் வரும் காய்கறி லாரிகள் எதுவும் உள்ளே அனுமதிக்கப்படாது என்றும், 26 ஆம் தேதி வரும் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து உடனடியாகச் செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, முதல்வர் அலுவலக முற்றுகை, குடும்பத்துடன் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எங்களிடம் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் உள்ளது. எந்த ஆட்சி அமர வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்றும் எச்சரித்துள்ளனர்.