தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் 04/04/2021 இரவுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 02/04/2021 அன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளேன். சேலம் மாவட்டம், அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை மக்கள் நிரூபிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் அமோக வரவேற்பால் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அதிமுக கூட்டணியின் பக்கம் உள்ளனர். ‘நான்கு ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை யாருக்குத் தெரியும்’ என ஸ்டாலின் பேசினார். தற்போது காலையில் இருந்து இரவு தூங்கும் வரை என்னுடைய பெயரையே உச்சரித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். நான் சந்தித்த சோதனைகள், சவால்களை வேறு எந்த முதலமைச்சரும் இதுவரை சந்தித்திருக்க மாட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவைக்குள் திமுக உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். சட்டமன்றத்திற்குள்ளே அராஜகத்தில் ஈடுபடும் திமுகவினர், ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்? விடாத டெண்டரில் ஊழல் நடைபெற்றதாக ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 7வது ஊதிய உயர்வு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில், பிற மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் முழு ஊதியம் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார், ஸ்டாலின் தயாரா? என்னை போலி விவசாயி என விமர்சிக்கும் ஸ்டாலின், நான் விவசாயம் செய்யும்போது அதை நேரில் வந்து பார்க்க வேண்டும். நீதி, நேர்மை தோற்கடிக்கப்பட்டு அநீதி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. திமுகவுக்காக உழைத்தவர்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். திமுகவின் வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." இவ்வாறு முதல்வர் கூறினார்.