ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தற்போது ஈரோடு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். மேலும், இன்று காலை அதிமுக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணியின் வெற்றியினை கருத்தில் கொண்டு செயல்படுவோம் எனக் கூறியிருந்தார். இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா போட்டியிடும் என நம்பப்பட்ட நிலையில், கூட்டணி வெற்றி முக்கியம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியது இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட தமாகா கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்பின் தமாகா நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “மீண்டும் தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம். தமாகாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஜி.கே.வாசன் கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசி ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும். அப்படி அறிவிக்கின்ற வேட்பாளர்களின் வெற்றிக்கு தமாகா பணியாற்றும்” எனக் கூறியுள்ளனர்.