சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,
''அதிமுக ஆட்சியில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இன்றைக்கு வெள்ள நீர் இல்லாத சூழல் இருக்கிறது. இருப்பினும் சில பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அரசு முனைப்புடன் செயலாற்றி அந்த பகுதியில் இருக்கின்ற நீரை எல்லாம் வெளியேற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. கடந்த ஒருவார காலமாக சென்னை மாநகரத்தில் பாதிப்படைந்த பகுதிகளை எல்லாம் அதிமுக சார்பில் நானும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அனைத்து பகுதிகளிலும் பார்த்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறோம். அனைத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிலிருந்து மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை மனிதாபிமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு மிகப்பெரிய நிகழ்வாக சென்னை மாநகரம் முழுமையே நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.
அப்பொழுது ஒரு செய்தியாளர் ஒருவர் ''வெள்ள மீட்புப் பணிகள் முடிந்த பிறகு அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கிறாரே?'' என்ற கேள்விக்கு,
''அப்புறம் அடுத்த கேள்வி கேளுங்க....'' என்றார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, ''நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. இன்னைக்கு நான் பார்க்க வந்தது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை. ஆறுதல் கூற வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் விவாதமும் வாக்குவாதமும் வேண்டாம். இந்த நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, நீ செய்யவில்லை நான் செய்யவில்லை என்று விவாதத்திற்கு உள்ளே போகக்கூடாது. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் அதுதான் முக்கியமான பணியாக அதிமுக கருதுகிறது'' என்றார்.