பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு 40 நாட்கள் நெருங்கி விட்டது. குடிப்பவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். குடிபோதைக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? எனவும் பழகி விட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியுள்ளனர். டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்ற சிலரின் கருத்துகளுக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.
இப்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட உள்ள பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அவ்வாறு ஒரு வாய்ப்பை மத்திய அரசு தந்திருந்தாலும், தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது.
ஏனெனில் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்டது போன்ற நெரிசல் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது கரோனா ஒழிப்புக்கள் முன் முயற்சியில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா நெருக்கடி மூலம், குடிப்பழக்கம் கொண்டவர்கள் அதை கைவிடவும், திருந்தவும், மறுவாழ்வு பெறவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. இந்த சாதகமான நிலையை பயன்படுத்தி பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா லட்சியங்களில் ஒன்று என்பது தமிழக அரசிற்கு தெரியாதது அல்ல. தமிழக அரசு இதில் உறுதியாக இருந்தால், மக்கள் இதற்கு பேராதரவை வழங்குவார்கள். மக்களின் நல்லெண்ணத்தை பெறும் மற்றொரு வாய்ப்பாகவும் இது அமையும்.
சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தனிநபர்களின் பொருளாதர இழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு, குடும்ப பெண்களின் மகிழ்ச்சி, குடிபோதை விபத்துகள் ஆகியவை ஒரு கட்டுக்குள் வர இந்நடவடிக்கை உதவும். இது போன்ற பற்பல பொது நன்மைகளும் ஏற்படும். எனவே, தமிழக அரசு மக்களின் நலன் கருதி இவ்விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.