பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ) அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள், அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து எந்தவித கட்டுப்பாடுமின்றி நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், ‘தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. மேலும், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி கோரிக்கை விடுத்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐயை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று (07-03-24) மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ அலுவலகம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. ராமேஸ்வரம் கோவிலை உலகத்தரம் வாய்ந்த ஆலயமாக மாற்றுவேன் என 2014ஆம் ஆண்டில், பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை ராமேஸ்வரம் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக, மாநில அரசு ரூ.37,000 கோடி கேட்டது. ஆனால், ஒன்றிய அரசு ஒரு ரூபாயைக்கூட இதுவரை ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி?. தமிழ்நாட்டு மக்களை ஒரு போதும் பிரதமர் மோடி ஏமாற்ற முடியாது” என்று கூறினார்.