Applications should be accepted; Quarry Owners Association demands!

குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் முறையில் அரசு திடீரென மாற்றம் கொண்டு வந்ததால் குவாரிகள் செயல்படாமல் முடங்கி, கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குவாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

இதன் பின் குவாரிகள் நடத்த அனுமதி பெற இனி ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.ஆர் குகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டா நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் சவுடு,கிராவல், குண்டுக்கல் மற்றும் மண் எடுப்பதற்கு தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் அனுமதி பெற வேண்டும்.

Advertisment

இந்த அனுமதியை வைத்து மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை, வருவாய் துறை, கிராம நிர்வாக அதிகாரி, சுற்றுச்சூழல் மற்றும் சியா கமிட்டி ஆகியோரிடம் அனுமதி பெற்று குவாரிகளை அதன் உரிமையாளர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான குவாரி நடத்துவதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேர் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர்கள், விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு குவாரி உரிமையாளர் சங்கம், உதவி இயக்குனர்களிடம் முறையிட்ட போது, குவாரி அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் இனி ஆன் லைன் மூலம் மட்டும் வாங்கப்படும் என்றும், மீண்டும் ரூ.1500 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் தெரிவித்துள்ளனர்.மீண்டும் மீண்டும் ஏன் விண்ணப்பிக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் கேட்டதற்கு, மேல் இடத்து உத்தரவு நாங்கள் என்ன செய்வது என அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த குவாரி உரிமையாளர்கள் குவாரிகளை சரிவர நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சூழலால் தமிழகம் முழுவதும் வீடு கட்டும் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் முடங்கி உள்ளன. எனவே ஏப்ரல் மாதத்திற்கு முன் குவாரி அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அடுத்த முறையில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.