திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (05.03.2021) அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தரப்பில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 22 இடங்கள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தில், திமுக தர முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசியபோது கே.எஸ்.அழகிரி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் மூன்றாவது அணியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது’ என மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமக, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.