புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பான சட்டமன்றத் தொகுதி விராலிமலை. பரபரப்பு என்பதை விட பதைபதைப்பான தொகுதியாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. அ.தி.மு.க. வேட்பாளராக இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரும் தி.மு.க. வேட்பாளராக இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்த தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர்.
இரு வேட்பாளர்களுமே கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கடந்து இரு கட்சித் தொண்டர்களும் முழுமையாக வேலை செய்யும் தொகுதியாக உள்ளது விராலிமலை. வேட்பாளர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களின் செல்ல மகள்களும் தங்கள் தந்தைகளுக்காகக் களமிறங்கி உள்ளனர். "நான் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறேன்" என்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர், "நான் வெற்றி பெற்றால் இன்னும் நிறைய செய்வேன் என்கிறார்" தி.மு.க. வேட்பாளர். அடுத்த கட்டமாக பணம், பரிசுப் பொருட்கள் சற்று மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில், இரு வேட்பாளர்களின் பேச்சுகளும் வாக்காளர்களின் மனங்களைக் கரைக்கிறது. இவர்களுக்கு மத்தியில் சில சுயேட்சைகள் வாங்கும் வாக்குகளால் தான் வெற்றி தோல்வி உறுதி செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் போஸ்டர் பதிவாக ஒன்று சுற்றி வருகிறது. அந்த போஸ்டரில், "நான் வெற்றி பெறவில்லை என்றால் என்னைப் பார்க்க முடியாது" என்பது போல உள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பாக பரவும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு விளக்கப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "இது முழுக்க முழுக்க தவறான செய்தி! என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும், என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்குச் சிந்திக்கக் கூடத் தெரியாது. நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன். எனது முகநூல் (Dr.C.Vijayabaskar), ட்விட்டர் (vijayabaskarofl) இன்ஸ்டாகிராம் (vijayabaskarofl) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை! மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்தப் போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!" இவ்வாறு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.