தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதன் அடிப்படையில் வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சோதனை முடிவில் இது குறித்த முழு விவரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. ஆனால், வருமான வரித்துறை சோதனை என்பது எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களுக்கு அவர்கள் செல்வதே கிடையாது. இதன் மூலம் இந்த சோதனை என்பது விதிமுறை மீறல் என்று தெளிவாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை கையாளுவதற்காக ஹிட்லர் கையாண்ட வழியைத்தான் மோடி கையாண்டு இருக்கிறார். முசோலினி எதை செய்தாரோ அதை மோடி செய்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலோ அல்லது பா.ஜ.க ஆதரவு தருகின்ற மாநிலங்களிலோ இந்த சோதனை நடந்திருந்தால் வரவேற்கலாம். தமிழகத்தில் கூட முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டின் விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.