தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக்கொண்ட, கூட்டணி தர்மத்தை போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம் என கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “பாஜகவில் இருந்து விலகியவர்கள் திமுகவில் சேர்ந்திருந்தால் அண்ணாமலை என்ன செய்திருப்பார். நிர்மல் குமார் ஏதோ பிடிக்காமல் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்திருக்கிறார். இதற்கு அண்ணாமலை முதலில் எங்கு சென்றாலும் வாழ்க என்றார். அப்போது சரி அண்ணாமலையின் கருத்து நாகரீகமாக இருக்கிறதே, அரசியலில் அவர் பக்குவப்பட்டுவிட்டார் என்று நினைத்தோம். ஆனால், இன்றைக்கு அவர் தெரிவித்திருக்கும் கருத்து அதற்கு மாறாக, அவர் இன்னும் பக்குவப்படவில்லை போல் தோன்றுகிறது. அண்ணாமலைக்கு ஏன் இந்த பயமும் பதற்றமும். நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன ரகசியம் இருக்கிறது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ரகசியம் இருந்தால் அதை அதிமுகவில் சொல்லிவிடுவாரோ என்று பயப்படுகிறாரா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு அவர்தான் தெளிவாகப் பதில் சொல்லவேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.