Skip to main content

“இந்தக் குரல் செங்கோட்டையில் ஒலிக்கும்” - மாஜி அமைச்சர் செங்கோட்டையன்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Erode East by-election; Sengottaiyan's opinion on AIADMK

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செங்கோட்டையில் எதிரொலிக்க இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு அசோகபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

இதன்பின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தலில் வெற்றியை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த தேர்தல் எதிர்காலத்தில் செங்கோட்டையில் எதிரொலிக்கத்தக்க மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு தான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வர இருக்கிறது. இந்தக் குரல் டெல்லி செங்கோட்டைக்கு எதிரொலிக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். 

 

எங்கள் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரத்தை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. தமாகா தான் தற்போது அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இருக்கிறது. மற்ற கூட்டணிக் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளதா என கேட்கின்றனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அதைப் பற்றி அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களும் எடப்பாடி பழனிசாமியும் அதைப் பற்றி அறிக்கைகளை வெளியிட இருக்கின்றனர்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்