Skip to main content

‘இம்சை அரசனான எடப்பாடி’ - பரபரப்பை கிளப்பிய ஓ.பி.எஸ் தரப்பு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

edappadi palaniswami poster goes viral on social media

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்ந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது.

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்படு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே, சமீபத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

 

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசுவை விட 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். இது அதிமுகவிற்கு படுதோல்வி என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விமர்சித்ததோடு, இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது. 

 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி வந்ததில் இருந்து நடைபெற்ற 8 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்று கூறி, ‘எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி’ எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இம்சை அரசன் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான நான்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் நெல்லை மாவட்டத்தில் பரவலாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் அதிமுக தோல்வியடைந்த தேர்தல்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்