தமிழ்நாடு அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்படி சிவகாசியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு கண்டனக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது,
"சொத்து வரி உயர்வா? சொத்து பறிப்பா? என்ற நிலையில் வாக்களித்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி கோமாளியாக்கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. பழைய வரிதான் மக்கள் செலுத்தி வந்தனர். இன்றைக்கு சிவகாசி மாநகராட்சிக்கு 150 சதவீதம் வரி ஏற்றினால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்றைக்கு திடீரென்று சொத்து வரியை நீங்கள் உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். வரிகட்ட முடியாமல் வீட்டை விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வீட்டுவரியாக ஆயிரம் ரூபாய் கட்டுபவர்களை, வருடத்திற்கு 2500 ரூபாய் கட்டச் சொன்னால், வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். வீட்டு உரிமையாளர்களும் கஷ்டப்படுவார்கள். பொதுமக்கள் கடுமையான பாதிப்பைச் சந்திப்பார்கள்.
சொத்து வரி உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப்பெற வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இன்று பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாயத் தொழிலை யாருமே கண்டுகொள்ளவில்லை. பட்டாசுத் தொழிலாளர்கள் வேலையின்றி வீதியில் நிற்கிறார்கள். எப்போது திறப்பார்கள்? எப்போது பூட்டுவார்கள்? வேலை எப்போது கிடைக்கும்? என்பது தெரியாமல் சிவகாசி மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள். சிவகாசியில் பட்டாசு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகளை தற்போது மூடியுள்ளனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் ஆளுகின்ற திமுக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதனுடைய சாதக, பாதகங்களை திமுக ஆட்சி சந்திக்க நேரிடும். உள்ளாட்சியில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஓட்டு போட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை, சொத்துவரியைக் கூட்டிவிட்டனர். அடுத்து பஸ் கட்டணம், சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். பால், தயிர், நெய் உட்பட எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர். இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக் கொண்டே போனால், இன்னும் 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். அவர்கள் வாழ்வதற்காக மக்களை பலிகடாக்கிவிட்டனர்.சொத்து வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மக்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். இந்தக் கட்சியை அழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. அதிமுகவில் இருப்பதே பெருமை. அதிமுகவை விட்டு வெளியேறிச் சென்றவர்களுக்கு சிறுமைதான் வந்து சேறும். ஆகவே இயக்கத்தை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும். அது உறுதி" என்றார்.