Published on 05/02/2020 | Edited on 05/02/2020
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா 29-வது ஆண்டு திருமண நாளன்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது பிரேமலதாவின் இந்த கருத்தை தேமுதிக நிர்வாகிகளும் வரவேற்றனர். தேமுதிகவின் இந்த ஆதங்கத்துக்கு உள்ளாட்சி தேர்தலில் பாமக கட்சிக்கு அதிமுக தலைமை கொடுத்த முக்கியத்துவத்தை தேமுதிக கட்சிக்கு கொடுக்கவில்லை என்று சொல்கின்றனர்.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு மூன்று சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட்டை தேமுதிக பெற முயற்சி செய்து வருவதாக சொல்கின்றனர். அதோடு விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷை எப்படியாவது ராஜ்யசபா எம்.பி ஆக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் அக்கட்சி தலைமை இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறவும் தேமுதிக ரெடியாக உள்ளதாக கூறிவருகின்றனர். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை என்றும் ஆதங்கமாக பேசி வருகின்றனர். இதனால் பாமகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது போல் தேமுதிகவிற்கும் வாங்கும் முனைப்பில் தேமுதிக இருப்பதாகவும் கூறிவருகின்றனர். அதிமுக தலைமைக்கு தேமுதிக ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால் எடப்பாடி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.