இடைத்தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கிய அ.திமு.க.வை விட, களத்தில் போட்டியிடாத பா.ம.க.விடம் தான் தி.மு.க.வுக்கு எதிரான தாக்குதல் அதிகமாக இருந்தது. இது பற்றி நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த "அசுரன்'’ படத்தைப் பார்த்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அதில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்து சொல்லப்பட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதைப் பார்த்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட முரசொலி அலுவலக இடத்தை ஸ்டாலின் திருப்பித் தரவேண்டும் என்று திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார். உடனே ஸ்டாலின், முரசொலி அலுவலகம் கட்டப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் கிடையாது. அது காலம் காலமாகத் தனியாருக்கு சொந்தமாக இருந்த நிலம் தான் என்று, அதற்கான 85-ஆம் ஆண்டு பட்டாவையும் வெளியிட்டு, பாமக கூறிய புகார்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இதன் பிறகும் ராம்தாஸ், 85-க்கு முன்பு அங்கே ஆதிதிராவிட மாணவர் விடுதி இருந்தது என்று கூறிவந்தார். மேலும் அது பஞ்சமி நிலம்தான் என்று கூறி, மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். ஸ்டாலினோ, அது பஞ்சமி நிலம் இல்லையென்றால் ராமதாசும், அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவதாக ஒப்புக்கொள்வார்கள் என்றால், மூலப்பத்திரத்தை வெளியிடுவேன் என்று அதிரடியாக கூறினார். இப்படி அனல் பறந்த இந்த இருவருக்குமான கருத்து யுத்தம் இடைத்தேர்தலின் பிரச்சாரத்திலும் எதிரலொலித்தது. இதை வைத்து அதிமுக தரப்பில் இருந்தும் அரசியல் செய்ததாக சொல்லப்பட்டது. அதாவது, முரசொலி அலுவலக இடம் பற்றி பா.ம.க. ராமதாஸ் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கு என்று விசாரிக்கும் படி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை வைத்து தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று அவர் ஒரு பக்கம் வியூகம் வைத்துள்ளதாக கூறுகின்றனர். அதேபோல் வக்போர்டுக்குச் சொந்தமான இடங்கள், இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள், வன்னியர் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்கள் போன்றவற்றில் எந்த பகுதியிலாவது தி.மு.க.வினர் ஆக்கிரமிப்பு செய்ததாகப் புகார்கள் இருந்தாலும், அவற்றையும் எடுத்து விசாரிக்க எடப்பாடி உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த சீனியர் அமைச்சர்கள் சிலர் எடப்பாடியிடம், ஆட்சி மாற்றம் நடந்தால், இதே பாணியில் திமுக நமக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று எடப்பாடியிடம் கூறியுள்ளனர். மேலும் சிறுதாவூர் பங்களா பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று ஏற்கனவே அந்தப் பகுதி மக்கள் கடுமையாக போராடியுள்ள சம்பவத்தையும் நாம் நினைத்து பார்த்து நிதானமாவும், சூதனமாவும் நடந்து கொள்வது தான் புத்திசாலித்தனம்ன்னு எடுத்து கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.