Published on 05/10/2019 | Edited on 05/10/2019
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகமும், நாங்குநேரி தொகுதிக்கு ராஜேந்திர பாலாஜி, தங்கமணி மற்றும் ஒரு சில அமைச்சர்களை தேர்தல் பணியில் அதிமுக தலைமை நியமித்து எப்படியாவது வெற்றி பெற வையுங்கள் என்று எடப்பாடி உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது எடப்பாடியிடம் ஒரு சில அமைச்சர்கள் புலம்பியதாக சொல்லப்படுகிறது. அதில் வேலூரில் பாஜகவை நாம் தேர்தல் பணியிலும், பிரச்சாரத்திலும் அதிகம் ஈடுபடுத்தாமல் இருந்ததால் தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். தற்போது மீண்டும் பாஜக ஆதரவை கோரியதால் மக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தி வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் பாமாவிற்கும், தேமுதிகவிற்கும் ஓட்டு வங்கி இருப்பதால் அதை வைத்து வெற்றி பெற முயற்சி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் பாஜக ஆதரவை அதிமுக நேரில் வந்து கேட்க வேண்டும் அப்போது தான் ஆதரவு கொடுப்போம் என்று பாஜக தரப்பிலிருந்து கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு அமைச்சர்களை மேலும் கடுப்பாகியதாக கூறுகின்றனர்.