3 வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.
வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக போன்ற முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோன்று திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகளும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 81.94% வாக்குகளும் மேகாலயாவில் 74.32% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 36 முதல் 45 இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும் இடதுசாரிகள் 6 முதல் 11 இடங்களை கைப்பற்றும் எனவும் டிஎம்பி 9 முதல் 16 இடங்களை கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. மேகாலயாவில் பாஜக 5 இடங்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் என்பிபி 20 இடங்களை கைப்பற்றும் என்றும் பிற கட்சிகள் 30 இடங்களை கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி 38 முதல் 48 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. மேலும், என்.பி.எஃப் 3 முதல் 8 இடங்களையும் காங்கிரஸ் 1 முதல் 2 இடங்களையும் பிற கட்சிகள் 5 முதல் 15 இடங்களையும் கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.