2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு சீட் வழங்காமல் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசியலிலிருந்து விலகுவதாக சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தனர்.
அதேசமயம், கட்சிப் பொறுப்பில் இருந்த பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் செளந்தர், வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராம்குமார் ஆகியோர் கட்சி வேலைகள் செய்யாமல் இருந்ததுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியதாகவும் கூறி, கடந்த 10-ஆம் தேதி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் சத்யா பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம் மற்றும் பெருமாள், மார்ட்டின் லூயிஸ், சௌந்தர், ராம்குமார் ஆகியோர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது கணவரும், பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவருமான பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாக இறைவனை தரிசிக்க ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலேயே இல்லாத நிலையில், கழகத்திற்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்? நாங்கள் கழகத்திற்கு எதிராக எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பது பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் சாட்சி.
இந்நிலையில், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய நாங்கள் கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறையை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடியார் காவல்துறை அறிக்கையைக் கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும். அல்லது, எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்துப் பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு எங்களைப் போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் மனதைப் புண்படுத்தியுள்ளார்கள். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.
அம்மா இருந்திருந்தால் எங்களைப் போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல் சூனியக்காரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. கழகத்திற்கு விசுவாசமான, உண்மை தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்தப் படுபாதகர்கள் விரைவில் நாசமாகப் போவார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்துகொண்டே போனால் கழகத்தின் நிலை? பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்தச் செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவரின் இந்த அறிக்கை கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.