கேரளாவில் கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதான இவர், இந்தியாவின் இளம் வயது மேயர்களில் ஒருவர். இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. இந்தநிலையில் தன்னை வயதை வைத்து விமர்சித்த பாஜக கவுன்சிலரை ஆர்யா ராஜேந்திரன், வறுத்தெடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாஜக கவுன்சிலர் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆர்யா ராஜேந்திரனை அவரது வயதை வைத்து விமர்சிக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "பொருட்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ளவை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின் எல்.கே.ஜி குழந்தைகளால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல" என கூறியிருந்தார். ஏ.கே.ஜி மையம் என்பது கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தலைமையகம் ஆகும்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் ஆர்யா ராஜேந்திரன், பாஜக கவுன்சிலரை வறுத்தெடுக்க தொடங்கினர். ஆர்யா ராஜேந்திரன் அந்த கவுன்சிலரை நோக்கி, "நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளிர்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த சபையில் உள்ள எவரும் இங்கு நியாயமான எதையும் கூறலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, முதிர்ச்சி தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் இப்போது, நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இன்றும், இங்குள்ள சில உறுப்பினர்கள் இத்தகைய கருத்துக்களை கூறினர். இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்" என்றார்.
Trivandrum Mayor Arya Rajendran roasting BJP councillors who mocked and insulted her mentioning her age. Arya Rajendran is the youngest Mayor in India. She is from CPIM. @SAryaRajendran pic.twitter.com/FXbZdFbiPv
— The Saudade Guy (@thesaudadeguy) June 17, 2021
ஆர்யா ராஜேந்திரன் பேசுகையில் பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட முயன்றனர். இருப்பினும் ஆர்யா ராஜேந்திரன் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களை பார்த்து, "இளைய தலைமுறையினர் உட்பட உங்களை பின்பற்றுபவர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிடும் கருத்துக்களை நான் உங்களுக்குக் காட்டினால், இந்த மேயரும் வீட்டில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் போன்றவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். யார் ஒரு பெண்ணை அவமதித்தாலும் அது மோசமானது.நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
ஆர்யா ராஜேந்திரன் பாஜக கவுன்சிலருக்கு பதிலளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலர் ஆர்யா ராஜேந்திரனை பாராட்டி வருகின்றனர்.