நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்டங்களும் டெல்லியில் களைகட்ட ஆரம்பித்துள்ளன. டெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் எந்த கட்சி அதிக இடங்களில் வெல்லும், எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் வெல்வார், எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார்கள் என பல்வேறு விதங்களில் சூதாட்டம் நடைபெறுகிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தை மிஞ்சும் அளவுக்கு இதில் பணம் புரளுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என நிறைய பேர் பணம் கட்டியிருப்பதாகவும், அதுபோல வேட்பாளர்களை பொறுத்தவரை கவுதம் கம்பீர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நிறைய பேர் பணம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆம் ஆத்மீ கட்சி எந்த தொகுதியிலும் வெல்வதற்கு வாய்ப்பில்லை என சூதாட்டத்தில் ஈடுபடுவோர் கருதுவதால் அந்த கட்சி ஜெயிக்கும் என குறைந்த நபர்களே பணம் கட்டியுள்ளனராம். மேலும் சாந்தினி சவுக்கில் பாஜகவின் ஹர்ஷவர்த்தனும், புதுடெல்லியில் பாஜகவின் மீனாட்சி லேகியும் வெற்றி பெறுவார்கள் என அதிக பேர் பணம் காட்டியுள்ளார்களாம்.
டெல்லியில் உள்ள கரோல்பார்க், சத்தா மார்கெட், காரிபோலி, பழைய டெல்லி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் சூதாட்டம் நடைபெறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.