பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தேவஸ்ரீ போயர். இவர் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளி. சிறு வயது முதலே படிப்பின் மீது ஆர்வம் கொண்டு படித்து வந்துள்ளார். இவரின் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தைக் கண்ட அவரின் பெற்றோர் தேவஸ்ரீ படிப்பதற்குத் தேவையான ஆதரவும் உதவியும் தொடர்ந்து செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இவர் இந்திய அரசியல் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் முனைவர் பட்டம் பெற்றது குறித்து தேவஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் முனைவர் பட்டம் பெற்றது எனக்கு கடினமானதாக இல்லை. அதற்கு காரணம் நான் முனைவர் பட்டம் பெற எனது அப்பாவும் அம்மாவும் விரும்பினார்கள். மேலும் எனது பெற்றோர் இதற்காக எனக்கு நிறைய உதவிகளைச் செய்தனர். 8 ஆம் வகுப்பு படிக்கும் வரை என்னிடம் புத்தகங்கள் இருந்தன. அதன் பிறகு எதுவும் இல்லை. என் பெற்றோர் புத்தகங்களைப் படித்து எனக்கு சத்தமாக சொல்லுவார்கள். யூடியூப்பின் உதவியுடனும் படித்தேன். என் பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். நான் பேராசிரியராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை" எனத் தெரிவித்துள்ளார்.