Skip to main content

அரசு மருத்துவமனையில் 68 நோயாளிகள் உயிரிழப்பு; உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

uttarpradesh government hospital senior citizen incident
மாதிரி படம்

 

உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக யோகி அதித்யநாத் இருந்து வருகிறார். இந்நிலையில் பல்லியா நகர் என்ற இடத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளிப்புற நோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. 

 

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி முதல் சுமார் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக இங்கு உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் வரை 4 நாட்களில் 57 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள். 

 

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கோடை வெயிலினால் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் திவாகர் சிங் அங்கிருந்து அசம்கார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 178 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 11 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் மூலம் கடந்த 5 நாட்களில் 68 நோயாளிகள் இறந்துள்ளனர். நோயாளிகளின் தொடர் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை மாநில சுகாதாரத்துறை அமைத்தது. இதையடுத்து அந்த கமிட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் என்பதால் இது தற்செயல் நிகழ்வு தான் என இந்த கமிட்டி கூறியுள்ளது. இருப்பினும் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்