உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,86,406 ஆக உயர்ந்த நிலையில், இதில் 1,02,393 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையிலும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டியுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு காலி செய்ய சொல்வதாக கேள்விப்படும் செய்திகள் வருத்தத்தை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்லாயிரக் கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளை வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வது வேதனை அளிக்கிறது. சென்னை, டெல்லி போன்ற பகுதிகளில் இதுபோன்று நடப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.