Skip to main content

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Tension again in Manipur; District Collector action order on 144

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. 

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், சில மாவட்டங்களில் மட்டும் அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. 

ஆனாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில், கடந்த 25ஆம் தேதி காலை மணிப்பூர் மாநிலத்தில், குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் ஜூபி எனும் பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன் தினம் (18-12-23) ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து, சூரசந்த்பூர் மாவட்ட ஆட்சியர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்