அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு சமீபத்தில் வழங்கியது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சன்னி வக்ஃபு வாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுமா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக உத்தரபிரதேச சன்னி வக்பு வாரிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வக்பு வாரிய தலைவர் சுபர் பரூக்கி, "வக்பு வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து பேசினோம். அதன்படி மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. எனவே இதுபற்றி முடிவெடுக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது" என கூறினார்.