மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மனபெந்திர ஜனா என்ற நபரை கைது செய்ய என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (06-04-24) காலை புபிதானிநகர் பகுதிக்கு தங்களது வாகனத்தில் சென்றனர். அப்போது அங்கு வந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட கும்பல், என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், அதிகாரிகளின் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும், இந்த தாக்குதலில் என்.ஐ.ஏ அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.