ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதலை நடத்தியது ஆதில் அகமது தர் எனும் நபர் தான் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ' இது மிகவும் துக்ககரமான ஒரு நாள். இந்த தாக்குதல் விவகாரத்தில் நாங்கள் எப்போதும் மத்திய அரசுக்கும், ராணுவத்திற்கும் துணையாக நிற்போம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு வாதத்தையும் மேற்கொள்ளும் சூழலில் நாம் இப்போது இல்லை' என கூறினார்.